கார் கவிழ்ந்த விபத்தில் தந்தை-மகன் பலி

வந்தவாசி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசு போக்குவரத்துக்கழக மெக்கானிக், மகனுடன் பலியானார். அவரது மனைவி, மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Update: 2023-09-20 18:45 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசு போக்குவரத்துக்கழக மெக்கானிக், மகனுடன் பலியானார். பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது.

கார் கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளவரசன் (வயது 40). திருப்போரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

இவர் தனது மனைவி மீனாட்சி, மகள் பிரசாந்தினி (5), மகன் பிரவீன் (3) ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தில் நடைபெற்ற தங்கையின் குழந்தை பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

பின்னர் அவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை இளவரசன் ஓட்டினார். வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமம் அருகே மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தந்தை- மகன் சாவு

இதில் இளவரசனின் மகன் பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இளவரசன் மற்றும் அவரது மகள் பிரசாந்தினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மனைவி மீனாட்சியும் லேசான காயம் அடைந்தார்.

இவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இளவரசன் இறந்து விட்டார்.

மகள் பிரசாந்தினி, மனைவி மீனாட்சி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து கீழ் கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்