பாம்பு கடித்து குழந்தை பலியான விவகாரத்தில் தந்தை அதிரடி கைது

திருவட்டார் அருகே பாம்பு கடித்து குழந்தை பலியான விவகாரத்தில் தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-15 19:09 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே பாம்பு கடித்து குழந்தை பலியான விவகாரத்தில் தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பயந்து ஓடிய குழந்தை

திருவட்டார் அருகே காட்டாத்துறை பாலவிளையைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 37). தொழிலாளியான இவருடைய மனைவி ஷிஜிமோள் (31). இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணமானது.

12, 9 வயதில் மகன்களும், 4½ வயதில் சுஷ்விகா மோள் என்ற மகளும் இருந்தனர்.

சுரேந்திரன் தினமும் மதுகுடித்து விட்டு மனைவியையும், குழந்தைகளையும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி அன்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த சுரேந்திரன், ஷிஜிமோளை தகாத வார்த்தைகள் பேசி, முடியை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

மேலும் குழந்தைகளையும் தாக்கியதோடு அனைவரையும் கொன்று விடுவேன் என கூறி வீட்டை பூட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன சுஷ்விகா மோள் வீட்டின் பின்புறமுள்ள ரப்பர் தோட்டத்திற்கு ஓடினார்.

பாம்பு கடித்து சாவு

அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கும், ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிசைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே ஷிஜிமோளின் குழந்தைகள், தந்தை தினமும் எங்களை தாக்குவார் என கூறி அழுத வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

தந்தை கைது

பின்னர் இதுதொடர்பாக ரவீந்திரன் மீது அவருடைய மனைவி ஷிஜிமோள் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் கொலை மிரட்டல், சித்ரவதை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேந்திரனை கைது செய்தார்.

பாம்பு கடித்து குழந்தை பலியான விவகாரத்தை தொடர்ந்து தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்