விபத்தில் தந்தை, மகன் உடல் நசுங்கி பலி
கிணத்துக்கடவு அருகே லாரி-கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே லாரி-கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
பெங்களூரு சென்றனர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 50), விவசாயி. இவர் கனரக மற்றும் பொக்லைன் வாகனங்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவருடைய மனைவி சித்ராதேவி (47). இவர்களுக்கு அஸ்விதா (22) என்ற மகளும், மொஹிந்த் (18) என்ற மகனும் உள்ளனர். அஸ்விதா சீன நாட்டில் 5-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பரமேஸ்வரன் தனது சொகுசு காரில் கனரக வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் மகனுக்கு தேவையான பொருட்கள் வாங்க பெங்களூருக்கு சென்றார். அவருடன் மனைவி சித்ராதேவியும், மகன் மொஹிந்த்தும் சென்றனர்.அங்கு அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து ஊருக்கு திரும்பினார்கள்.
லாரி-கார் மோதல்
காரை மொஹிந்த் ஓட்டினார். முன் சீட்டில் பரமேஸ்வரனும், பின் சீட்டில் சித்ரா தேவியும் அமர்ந்து இருந்தனர். அவர்களின் கார் நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவை-பொள்ளாச்சி வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.அப்போது முன்னால் தென்னை மர துண்டுகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த மினி லாரி ஒன்று சிக்னல் காட்டாமல் திடீரென யூ டர்ன் பகுதியில் திரும்பியதாக தெரிகிறது.
இதனை சற்றும் எதிர்பாராத மொஹிந்த் பிரேக் பிடிக்க முயன்றதாக தெரிகிறது. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது கார் மோதி சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் லாரியும், காரும் சாலையில் கவிழ்ந்தன.
தந்தை, மகன் பலி
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மொஹிந்த் மற்றும் அவருடைய தந்தை பரமேஸ்வரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி சித்ரா தேவி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கிய சித்ராதேவியை மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த மொஹிந்த், பரமேஸ்வரன் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்தில் சிக்கிய லாரியும், காரும் சாலையில் கவிழ்ந்து கிடந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் கிரைன் எந்திரத்தை வரவழைத்து, லாரி, கார் மற்றும் சாலையில் சிதறி கிடந்த தென்னை மர துண்டுகளை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் மினி லாரியின் டிரைவரான சென்றாம்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் (48) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை-பொள்ளாச்சி சாலையில் அதிகாலையில் நடந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.