தந்தை - 2 மகன்கள் கைது
நிலத்தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை - அவரது 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை - அவரது 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
நிலப்பிரச்சினை
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணை அருகே ஆண்டி கொட்டாயை சேர்ந்தவர் பழனி (வயது 47). விவசாயி. இவரும், பாலகிருஷ்ணன் என்கிற ஜெயராமன் (50) என்பவரும் உறவினர்கள். இவர்களுக்குள் நிலபிரச்சினை உள்ளது.
இந்த நிலையில் பழனி நேற்று முன்தினம் கொல்லாபுரி அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அந்த நேரம் மோட்டார்சைக்கிளில் பாலகிருஷ்ணனும், அவருடைய மகன்கள் சதீஷ்குமார் (19), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
விவசாயி வெட்டிக் கொலை
அப்போது அவர்களுக்குள் நில பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரம் பழனியை, பாலகிருஷ்ணன், அவருடைய மகன்கள் சதீஷ்குமார், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் அரிவாளால் வெட்டினார்கள். இதில் பழனி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இந்த கொலை தொடர்பாக தகவல் கிடைத்ததும் கே.ஆர்.பி. அணை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை - 2 மகன்கள் கைது
இந்த கொலை தொடர்பாக கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன், அவரது 2 மகன்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் அங்கு எதுவும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.