சிவகிரி அருகே பரிதாபம் வாய்க்காலில் கார் கவிழ்ந்தது; எலக்ட்ரீசியன் சாவு

சிவகிரி அருகே வாய்க்காலில் கார் கவிழ்ந்ததில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-12 22:44 GMT

சிவகிரி

சிவகிரி அருகே வாய்க்காலில் கார் கவிழ்ந்ததில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

எலக்ட்ரீசியன்

சிவகிரி அருகே உள்ள வள்ளிபுரம் கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி அபிநயா. இவர்களுக்கு சுபிக்‌ஷன் (6) என்ற மகனும், தன்மித்ரா (3) என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் சதீஷ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு சிவகிரி அருகே உள்ள சிலுவம்பாளையம் என்ற இடத்தில் காரில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது மழை பெய்து கொண்டு இருந்தது. அங்குள்ள சடையப்பசாமி கோவில் அருகே சென்றபோது ரோட்டில் இருந்த வளைவு சதீஷ்குமாருக்கு தெரியவில்லை.

கார் கவிழ்ந்தது

இதனால் நிலை தடுமாறிய கார் ரோட்டு ஓரம் இருந்த கசிவுநீர் வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது. கார் கவிழ்ந்தபோது இடிபாடுகளுக்குள் சிக்கி, காருக்குள்ளேயே சதீஷ்குமார் பிணமானார். நள்ளிரவு நேரம் என்பதால் கார் கவிழ்ந்தது யாருக்கும் தெரியவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வாய்க்காலுக்குள் கார் கவிழ்ந்து கிடப்பதை பார்த்து, உடனே சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.

உறவினர்கள் கதறல்

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றார்கள். பின்னர் காருக்குள் இருந்து சதீஷ்குமாரின் உடலை மீட்டார்கள். அதன்பின்னர் ராட்சத கிரேனை வரவழைத்து வாய்க்காலுக்குள் இருந்து காரை மீட்டனர்.

பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சதீஷ்குமாரின் உடலை பார்த்து அபிநயாவும், உறவினர்களும் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்