சென்னிமலையில் தனியார் ஆம்புலன்ஸ் வேன் மோதி சைக்கிளில் சென்ற மாணவன் பலி

சென்னிமலையில் தனியார் ஆம்புலன்ஸ் வேன் மோதி சைக்கிளில் சென்ற மாணவன் இறந்தான்.

Update: 2022-09-14 20:56 GMT

சென்னிமலை

சென்னிமலையில் தனியார் ஆம்புலன்ஸ் வேன் மோதி சைக்கிளில் சென்ற மாணவன் இறந்தான்.

மாணவன்

சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ரோட்டில் வசிப்பவர் செர்லின். இவரது கணவர் சுரேஷ். இவர்களுக்கு சுபாஷ் (வயது 15), கவிதன் (13), சந்தோஷ் (12) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். செர்லினுக்கும், சுரேசுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதில் மூத்த மகன் சுபாஷ் மற்றும் கடைசி மகன் சந்தோஷ் ஆகிய இருவரும் செர்லினுடன் வசித்து வருகின்றனர். சந்தோஷ் தற்போது சென்னிமலையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

மோதியது

இந்த நிலையில் உணவகம் வைப்பதற்கான வேலைகளில் செர்லின் ஈடுபட்டு வந்தார். அவருக்கு உதவியாக இருக்க நேற்று பள்ளிக்கூடத்துக்கு சந்தோஷ் செல்லவில்லை. இந்த நிலையில் கடையில் உப்பு வாங்கி வருவதற்காக சந்தோஷ் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.

அப்போது சென்னிமலை - வெள்ளோடு ரோட்டில் குமராபுரி பகுதியில் சந்தோஷ் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் ஆம்புலன்ஸ் வேன் சந்தோஷ் சென்ற சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சந்தோசை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்து விட்டான்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்