வெள்ளோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவன் சாவு- சுதந்திர தினத்தையொட்டி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
வெள்ளோடு அருகே சுதந்திர தினத்தையொட்டி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மோட்டார்சைக்கிள் மோதி பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.
சென்னிமலை
வெள்ளோடு அருகே சுதந்திர தினத்தையொட்டி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மோட்டார்சைக்கிள் மோதி பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.
பள்ளிக்கூட மாணவன்
சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள பெருந்துறை ஆர்.எஸ். கொம்மக்கோவில் பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவருடைய மகன் கபிலன் (வயது 12). இவன் பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சுதந்திர தினம் என்பதால் அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் தனது தங்கை கனிமலருடன் பெருந்துறை ஆர்.எஸ் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்றான். அங்கு சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எமரால்டு சிட்டி என்ற இடத்தில் ரோட்டை கடக்கும் போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிள் கபிலன் மீது மோதியது.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட கபிலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு ெசன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கபிலன் பரிதாபமாக இறந்து விட்டான். மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான ஹரிவரதன் (19) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.