வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-07-10 21:24 GMT

ஈரோடு

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கோபி

கோபி அருகே உள்ள கோட்டு புள்ளாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 65). இவருடைய உறவினர் ரங்கன் (40). 2 பேரும் கூலித்தொழிலாளர்கள். நேற்று மொபட்டில் ராமன் தனது உறவினரான ரங்கனுடன் சத்தியமங்கலம்- கோபி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பழைய வள்ளியம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த காரும், மொபட்டும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மொபட்டில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிேலயே ரங்கன் பரிதாபமாக இறந்தார். கோபி அரசு ஆஸ்பத்திரியில் ராமன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி

பவானியை அடுத்த அத்தாணி பாரியூர் மேட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் நவீன் (வயது 19). மெக்கானிக். நவீனும், அவருடைய நண்பருமான அருண் (20) என்பவரும், மோட்டார்சைக்கிளில் கோபியில் இருந்து பவானியை அடுத்த குட்டமுனியப்பன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். வரதநல்லூர் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல மோட்டார்சைக்கிள் முயன்றது. அப்போது எதிரே வந்த காரும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற நவீன், அருண் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் நவீன் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். அருண் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெருந்துறை

திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள மங்கலப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 50). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் இவர், ஈரோடு ரோடு வண்ணான்பாறை பகுதி அருகே, ரோட்டை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆரோக்கியம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்