மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி திருவாரூரில், காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2022-06-23 16:10 GMT

மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி திருவாரூரில், காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

மேகதாது அணை

காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை அனுமதிக்க கூடாது. கர்நாடகாவின் சட்ட விரோத வரைவு திட்ட அறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டவிரோதமானது

மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்ய கர்நாடக மாநில அரசுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது சட்டவிரோதமானது.

இந்த சட்டவிரோத அனுமதியை பயன்படுத்தி கர்நாடக மாநில அரசு திட்ட அறிக்கையை மத்திய ஜல்சக்தி துறையிடம் சமர்ப்பித்தது. அதனை ஏற்று மத்திய நீர்வள ஆணையம் சட்ட விரோத வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.

நிராகரிப்பு

இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேகதாது அணை கட்டுவது சட்ட விரோதம் என்றும், கர்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒருமித்த கருத்தோடு வந்தால் மட்டுமே தான் விவாதத்துக்கு ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறி மேகதாது வரைவு திட்ட அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இதேபோல் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மத்திய அரசு அனுப்பி வைத்த வரைவு திட்ட அறிக்கையை நிராகரித்து உத்தரவிட வேண்டும். மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை மத்திய அரசு திரும்பப்பெற மறுத்தாலும், ஆணையம் நிராகரித்து உத்தரவிட மறுத்தாலும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தை நெல் விவசாய சங்க நிர்வாகி தியாகபாரி தொடங்கி வைத்தார். இதில் மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், மாநில துணை செயலாளர்கள் செந்தில் குமார், வரதராஜன், கவுரவ தலைவர் அசோகன், திருவாரூர் மாவட்ட தலைவர் சுப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்