ஊட்டியில் உண்ணாவிரத போராட்டம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை வழங்க கோரி ஊட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
ஊட்டியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு படுகர் சமுதாய முன்னாள் தலைவர் அய்யாரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்க தலைவர் ஐ.போஜன் பேசியதாவது:-
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் பச்சை தேயிலைக்கு விலை கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கீழ் கோத்தகிரியில் செயல்படாமல் மூடப்பட்டு உள்ள இன்கோசர்வ் தேயிலை தொழிற்சாலையை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு தொழில் வணிகத்துறை மூலம் விவசாயிகளுக்கு 51 சதவீத பங்கும், அரசுக்கு 49 சதவீத பங்கும் என மாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம். மத்திய மந்திரி முருகனிடம், பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.30 கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், படுகர் இன மக்களை மலைவாழ் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தவறினால், வருகிற மார்ச் மாதம் ஊட்டியில் ஒரு லட்சம் விவசாயிகளை திரட்டி உண்ணாவிரத போராட்டம் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர்களுடன் இணைந்து நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் நீலகிரி தேயிலை விவசாய சங்க தலைவர் ஜே.பி.சுப்பிரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.