ஊராட்சி மன்ற அலுவலகம் முன் உண்ணாவிரதம்

ஊராட்சி மன்ற அலுவலகம் முன் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-07 19:19 GMT

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு ஊராட்சிக்கு உட்பட்ட மெய்க்காவல்புத்தூர் காமராஜர் நகர் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு, வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், மகாராஜன், அம்பிகா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினர். போராட்டத்தின்போது, ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மயானத்துக்கு பாதை, குடிநீர் தொட்டி, மின்சார வசதி, தண்ணீர் வசதி, மின் விளக்கு மற்றும் தார் சாலைகள் அமைத்து தரக்கோரியும், அங்காடி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீன்சுருட்டி போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், குண்டவெளி வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட சில கோரிக்கைகளை ஒரு வார காலத்திற்குள்ளும், மற்ற கோரிக்கைகளை படிப்படியாகவும் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்