காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சி ராமபட்டினத்தை சேர்ந்தவர் விவசாயி சிவசாமி. இவர், அந்த பகுதியில் உள்ள 4 கல்குவாரிகள், 2 கிரசர் தொழிற்சாலைகள் அரசின் விதிமுறைகளை மீறி குடியிருப்புகளுக்கு அருகில் செயல்பட்டு வருவதாகவும், அவற்றை மூட வலியுறுத்தி இவரது விவசாய நிலத்தில் கடந்த 12-ந் தேதி தனி நபராக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இந்த போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயியிடம், தாசில்தார் புவனேஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கலெக்டரின் உத்தரவுப்படி 17-ந் தேதி சம்பந்தப்பட்ட கல்குவாரியில் தாசில்தார் அடங்கிய வட்ட அளவிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்து போராட்டத்தை கைவிட்டார்.