டாஸ்மாக் கடையால் குப்பைகளாக மாறிய விளைநிலங்கள்

கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் டாஸ்மாக் கடையால் பிளாஸ்டிக் கவர்கள் கொட்டப்படும் குப்பை கிடங்காக விளைநிலங்கள் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-03-09 17:40 GMT

கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் டாஸ்மாக் கடையால் பிளாஸ்டிக் கவர்கள் கொட்டப்படும் குப்பை கிடங்காக விளைநிலங்கள் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

டாஸ்மாக் கடை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டது. மேலும் நிலத்தின் மதிப்பு உயர்ந்த காரணத்தாலும், ரியல் எஸ்டேட் தொழிலாலும், அங்கு விவசாயம் செய்ய யாரும் வராத காரணத்தால் டாஸ்மாக்கை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் வெடித்து காணப்படுகிறது.

டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் குடித்துவிட்டு மதுபாட்டில்களை போதையில் உடைத்து விட்டு நிலங்களில் போட்டு விட்டு செல்கின்றனர்.

இதனால் அந்த நிலங்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் அருகில் உள்ள விவசாய நிலங்களிலும் கண்ணாடி பாட்டில்கள் வீசப்படுவதால் விவசாயிகளுக்கு ஏர் ஓட்டும்போதும், நாற்று நடும் போதும் கண்ணாடி பாட்டில்கள் காலில் குத்தி காயம் ஏற்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர்கள் வருவதற்கே சிரமப்படும் சூழல் நிலவுகிறது.

குப்பைகள்

மேலும் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் கும்பல் கும்பலாக உட்கார்ந்து மது அருந்திக்கொண்டு அருவருக்கத்தக்க வகையிலும் அச்சுறுத்தம் வகையிலும் பேசுவதால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மிகவும் அச்சமடைகின்றனர்.

மது குடிப்பவர்கள் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட குப்பைகளை நிலங்களில் வீசி செல்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த பகுதி விவசாய நிலங்கள் அறுவடை செய்தபின் கால்நடைகள் மேயும் இடமாக விளங்கியது. அதன் மூலம் நிலத்தில் பயிரிடும்போது கால்நடைகளின் எச்சம் உரமாகவும் பயன்பட்டது. ஆனால் தற்போது விவசாய நிலங்கள் பிளாஸ்டிக் கவர் குப்பைகளை போடும் இடமாக மாறியதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை தடுக்க வேண்டும்.

பள்ளி, கோவில், தேவாலயம், மசூதி ஆகியவற்றின் அருகில் டாஸ்மாக் கடைக்கு அனுமதி இல்லையோ அதேபோல விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழிவு பாதை

இதுகுறித்து வந்தவாசியை சேர்ந்த விவசாயி ஹாஜா மொய்தீன் கூறியதாவது:-



நாங்கள் 40 ஆண்டு காலமாக விவசாயம் செய்து வருகிறோம். என்னுடைய தந்தை காலம் முதல் என்னுடைய காலம் வரை விவசாயம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எதிர்கால தலைமுறையினரும் விவசாயம் செய்ய வேண்டும்.

பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பன்றிகள் வளர்த்து விவசாயத்தை அழித்தார்கள். எலிகளை ஒழித்ததால் விவசாயம் அழிந்து வருகிறது. பல்வேறு வகையில் விவசாயம் அழிந்தாலும் கூட இன்றுவரை பாரம்பரித்தை காப்பாற்ற நாங்கள் விவசாயிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த டாஸ்மாக் குப்பைகளால் இன்று விவசாயம் மிகப்பெரிய அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எப்படி வந்து கோவில், பள்ளிவாசல், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள் அருகில் டாஸ்மாக் கடைகள் இயங்கக்கூடாது என்று கூறுகிறார்களோ, அதே போல நீர்நிலைகள் அருகிலும் விவசாய நிலங்களுக்கு அருகிலும் டாஸ்மாக் கடை இயங்கக்கூடாது என்ற சட்டத்தை போட்டு செயல்படுத்த வேண்டும். விவசாயத்தை மறுமலர்ச்சி செய்திட நிவாரண சட்டங்கள் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அகற்ற வேண்டும்

கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த விவசாயி பலராமன் கூறியதாவது:-


நாங்கள் இந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் கும்பல் கும்பலாக குடிக்க வரும் நபர்கள் விவசாய நிலங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு குடிப்பதனால் விவசாய வேலைக்கு வரும் பெண்கள் பயந்து கொண்டு வேலைக்கு வருவதில்லை. அதனால் எங்களுடைய விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலையின் போது மதுபாட்டில்கள் குத்தி காயம் ஏற்படுவதால் வேலைக்கு வர மறுக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு இடர்பாடுகள் டாஸ்மாக் கடையால் ஏற்படுகிறது. இதனால் நாங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, இந்த பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்