அழிவின் விளிம்பில் கம்பம் பள்ளத்தாக்கு; வணிக வளாகங்களாக மாறும் விளைநிலங்கள்

வணிக வளாகங்களாக மாறும் விளைநிலங்களால் அழிவின் விளிம்பில் கம்பம் பள்ளத்தாக்கு செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2023-08-27 21:00 GMT

நாட்டில் மக்கள்தொகை பெருகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கம்பம் பள்ளத்தாக்கு

விளைநிலங்களில் உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், வணிக பயன்பாட்டு கட்டிடங்களாகவும் மாற்றப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதனால், விளை நிலங்களின் பரப்பளவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.

தேனி மாவட்டத்திலும் விளைநிலங்கள் மாற்றுப் பயன்பாட்டுக்கு மாற்றப்படும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெற்று வந்தன. அத்துடன் 18-ம் கால்வாய் மூலம் சுமார் 4 ஆயிரத்து 600 ஏக்கர் நிலங்களும், பி.டி.ஆர்.-தந்தை பெரியார் வாய்க்கால் மூலம் உத்தமபாளையம், தேனி தாலுகாவுக்கு உட்பட்ட சுமார் 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்களும் நேரடி பாசனம் பெறுகிறது.

இந்த கால்வாய்கள் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசனம் பெறுகின்றது. இதில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகள் மட்டும் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. மற்ற இடங்களில் ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

வணிக வளாகங்களாக மாறும் விளைநிலங்கள்

கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இருபோக நெல் பாசன நிலங்கள் இருப்பதாக அரசு ஆவணங்களில் இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் கம்பம் பள்ளத்தாக்கில் ஏராளமான விளை நிலங்கள் பறிபோய் உள்ளன. திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையப்படுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலையோரம் விளை நிலங்கள் வீட்டுமனைகளாகவும், வணிக கட்டிடங்களாகவும் மாறி வருகிறது.

பழனிசெட்டிபட்டி முதல் கூடலூர் வரை சாலையோர விளை நிலங்கள் மாற்றுப் பயன்பாட்டு நிலமாக அன்றாடம் மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் அதிக அளவில் வணிக கட்டிடங்கள் கட்டப்படுவதோடு, விளைநிலங்களில் மண்ணை கொட்டி வீட்டுமனையாக மாற்றும் பணிகளும் நடந்து வருகின்றன.

விளை நிலங்களை வீட்டுமனையாகவோ, வணிக பயன்பாட்டுக்கோ மாற்றுவது என்றால் அதற்கு ஏராளமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், அப்படி எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் வீட்டுமனைகளாக மாறி வருவதாக கூறப்படுகிறது. அரசுத்துறை அதிகாரிகளும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தடையில்லா சான்றிதழ்களை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வணிக கட்டிடங்கள்

இதுகுறித்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்குள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, கரும்பு உள்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சின்னமனூரில் கரும்பு சாகுபடி செய்யும் நிலங்கள் மண் மேடாக மாற்றப்பட்டு வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இன்னும் கட்டிடங்கள் கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் நிலத்தின் தன்மை மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு எல்லாம் எங்கிருந்து மண் கொண்டு வரப்படுகிறது? அதற்கு முறையான அனுமதி பெறப்படுகிறதா? என்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.

விளைநிலங்களை வீட்டுமனை, வணிக பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான தடையில்லா சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விதிகளை பின்பற்றாமல் கொடுத்து விடுவதாக தெரிகிறது. எனவே, தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்று வழங்கப்பட்ட தடையில்லா சான்று குறித்த புள்ளி விவரங்களை சேகரித்து அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய அரசு முன்வர வேண்டும்.

பறிபோகும் விளை நிலங்கள்

புதிது, புதிதாக விளை நிலங்களை மாற்று பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதை தடுக்க உரிய கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால், மாவட்டத்தின் விளை நிலங்கள் பரப்பளவு பறிபோவதுடன், வளம் கொழிக்கும் கம்பம் பள்ளத்தாக்கு அழிவின் விளிம்புக்கு செல்லும் நிலை ஏற்படும். இதனால் உணவு உற்பத்தி பெரிய அளவில் சரிவை சந்திக்கும். தற்போது உணவு உற்பத்தியை பெருக்க அதிக அளவில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. ரசாயன முறையில் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களை சாப்பிடும் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதே நிலை நீடித்தால் உணவு உற்பத்தியை பெருக்க ரசாயன உரம் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். அது எதிர்கால மக்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எனவே, விளை நிலங்களை வணிக பயன்பாட்டுக்காக அழிக்கும் முயற்சிகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்