கோத்தகிரி பகுதியில் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரிப்பு-கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலை காரணமாக பசுந்தேயிலை சாகுபடி அதிகரித்து வரும் நிலையில், அதன் கொள்முதல் விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.
கோத்தகிரி
கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலை காரணமாக பசுந்தேயிலை சாகுபடி அதிகரித்து வரும் நிலையில், அதன் கொள்முதல் விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.
தேயிலை விவசாயம்
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயமே உள்ளது. இந்த தொழிலை நம்பி பல ஆயிரக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகளும், தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்களும் உள்ளனர்.கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதுமான மழை பெய்ததாலும், இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருவதாலும் தேயிலைத் தோட்டங்களில் உள்ள செடிகளில் தற்போது கொழுந்துகள் அதிகம் வளர்ந்து சாகுபடி அதிகரித்து வருகிறது. மேலும் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வரும் பசுந்தேயிலை வரத்தும் கணிசமாக அதிகரித்து உள்ளது. ஆனால் பசுந்தேயிலையின் கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து தற்போது கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்சம் 14 ரூபாய் 50 பைசாவிற்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவே கடந்த மே மாதம் கிலோவுக்கு 18 ரூபாயாகவும், ஜூன் மாதம் 16 ரூபாய் 50 பைசாவகவும் இருந்தது. தற்போதைய கொள்முதல் விலை போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
போராட்டங்களில் ஈடுபட முடிவு
இந்தநிலையில் சீசன் காரணமாக தேயிலை சாகுபடி அதிகரித்து வருவதால் அதைப் பறிப்பதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேயிலைப் பறிக்கும் தொழிலாளர்கள் ஒரு கிலோ பச்சைத் தேயிலை பறிக்க 6 ரூபாய் முதல் 8 ரூபாய் கூலியாக பெற்று வருகின்றனர். கொள்முதல் விலை வெகுவாக குறைந்துள்ளதால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் வளர்ந்துள்ள தேயிலை கொழுந்துகளை அறுவடை செய்வதற்கு அறுவடை எந்திரங்களைப் பயன்படுத்தி தாங்களாகவே அறுவடை செய்து வருகின்றனர்.மேலும் பச்சைத் தேயிலைக்கு நிலையான கொள்முதல் விலையை நிர்ணயிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.