குளத்தை மராமத்து செய்ய வலியுறுத்தி சென்னைக்கு நடைபயணம் புறப்பட முயன்ற விவசாயிகள்
வடக்குவிஜயநாராயணம் பெரியகுளத்தை மராமத்து செய்ய வலியுறுத்தி சென்னைக்கு விவசாயிகள் நடைபயணம் புறப்பட முயன்றனர்.
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் பெரியகுளம் உள்ளது. அப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பெரியகுளத்தை உடனடியாக போர்க்கால அடிப்படையில் மராமத்து செய்ய அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார்கள்.
இந்நிலையில் நேற்று கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வடக்கு விஜயநாராயணம் பாசன சங்க விவசாயிகள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் தலைமையில் சென்னை தலைமை செயலகம் கோட்டை நோக்கி நடைபயணமாக புறப்பட முயன்றனர். இதனை அறிந்ததும் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று நடைபயணம் சென்றவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் நிலையம் அருகே அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திசையன்விளை தாசில்தார் முருகன், நாங்குநேரி பொதுப்பணித்துறை பொறியாளர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் ராணி, கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.