நாணல் புற்களுடன் வந்து முறையிட்ட விவசாயிகள்

நாணல் புற்களுடன் வந்து முறையிட்ட விவசாயிகள்

Update: 2022-06-13 19:56 GMT

தஞ்சாவூர்:

வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி நாணல் புற்களுடன் வந்து விவசாயிகள் முறையிட்டதால் களஆய்வு மேற்கொள்ள கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா உத்தரவு பிறப்பித்தார்.

நாணல் புற்களுடன் வந்த விவசாயிகள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அம்மாப்பேடடை ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் விவசாயிகள் பலர், நாணல் புற்களுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ராவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அம்மாப்பேட்டை ஹவில்தார் சத்திரத்தில் இருந்து பல்லவராயன்பேட்டை கிராமம் வரை வடிகால் வாய்க்கால் உள்ளது. தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள இந்த வாய்க்கால் மூலம் அம்மாப்பேட்டை, புத்தூர், பல்லவராயன்பேட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

தண்ணீர் பாயாத நிலை

கடந்த சில ஆண்டுகளால் நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணிகளால் வாய்க்கால் தூர்ந்துபோயும், ஆங்காங்கே வாய்க்காலில் நாணல் புற்கள் மண்டியும் தண்ணீர் பாயாத நிலையில் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பெருமழையின் போது தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டதால், அப்போது ஆய்வுக்காக வந்த மத்திய குழுவினர் பல்லவராயன்பேட்டையில் இந்த வடிகால் வாய்க்காலை நேரில் பார்வையிட்டனர். அப்போதே விவசாயிகள் இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் நடப்பு ஆண்டு இந்த வாய்க்காலை நீர்வள ஆதாரத்துறையினர் சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் கீழ் தூர்வாரவில்லை. தற்போது குறுவை, சம்பா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்க்காலில் இதுவரை தண்ணீர் திறக்கவில்லை. இந்த வாய்க்காலை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்று கொண்ட கூடுதல் கலெக்டர், உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்