மாங்காய்களை தோட்டத்திலேயே புதைக்கும் விவசாயிகள்
வேதாரண்யம் பகுதியில் வியாபாரிகள் வராததால் மாங்காய்கள் அழுகி வீணாகிறது. அதை விவசாயிகள் தோட்டத்திலேயே புதைக்கின்றனர். இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் வியாபாரிகள் வராததால் மாங்காய்கள் அழுகி வீணாகிறது. அதை விவசாயிகள் தோட்டத்திலேயே புதைக்கின்றனர். இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.
மா சாகுபடி
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை, கத்தரிப்புலம், தேத்தாக்குடி, புஷ்பவனம், நாகக்குடையான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வேதாரண்யம் பகுதியில் அல்போன்சா, ருமேனியா, கவுதாரி, செந்தூரா, ஒட்டு உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவு காய்த்தது.
இந்த நிலையில் மாங்காயில் கரும்புள்ளி நோய் விழுந்ததால் வியாபாரிகள் மாங்காயை வாங்க முன் வரவில்லை. இதனால் கடந்த ஆண்டு ரூ.20-க்கு மேல் விற்ற மாங்காய்கள் தற்போது ஒரு ரூபாய்க்கு கூட வாங்க வியாபாரிகள் முன் வராததால் மாங்காய்கள் மரத்திலேயே பழுத்து கீழே விழுந்து அழுகி உள்ளது. மேலும் இதனால் துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் தோப்பிலேயே குழி தோண்டி புதைக்கின்றனர்.
கண்டு கொள்வதில்லை
இந்த ஆண்டு அதிக அளவில் விளைச்சல் இருந்தும் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பி இருந்த நிலையில் சுமார் 1000 டன் அழுகிய மாங்காய்களை புதைக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளனர். தமிழக தோட்டக்கலை துறையினர் இந்த மா விவசாயிகளை கண்டு கொள்வதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மா விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலையில், இந்த ஆண்டிற்கான மா மகசூல் இருந்தும் விலை இல்லாததால் பெரிதும் நஷ்டம் அடைந்து உள்ளனர். எனவே மா விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.