பேரையூரில் அதிகாரிகள் வராததால் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

பேரையூரில் அதிகாரிகள் வராததால் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-03-14 21:03 GMT

பேரையூர், 

பேரையூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்ளாத நிலையில், கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

பேரையூர் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை வழங்குவார்கள். கூட்டத்துக்கு பல்வேறு அரசு துறை அதிகாரிகள் அல்லது அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் கூறுவார்கள். வழக்கம்போல் கூட்டம் நேற்று நடைபெறும் என்று வருவாய் துறையினர் விவசாயிகளுக்கு தகவல் அனுப்பினார்கள். அதன் அடிப்படையில் பேரையூர் தாலுகாவில் உள்ள விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு துணை தாசில்தார்கள் பாலகுமார், கருப்பையா தலைமை வகித்தனர். கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் 11.30 மணி வரை பல்வேறு துறைகளை சார்ந்த பெரும்பாலான அலுவலர்கள் வரவில்லை. கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி துணை தாசில்தார்களிடம் வழங்கினர். விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு பல்வேறு துறை அலுவலர்கள் வராததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் வேதனையுடன் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புறக்கணிப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, தாலுகா அலுவலகத்தில் இருந்து கூட்டத்துக்கு அழைப்பு வந்த நிலையில் கூட்டத்துக்கு வந்தோம். ஆனால் எங்களது கேள்விகளுக்கு பதில் கூற அரசுத்துறைகளை சேர்ந்த அலுவலர்கள் யாரும் வரவில்லை. விவசாய பணிகளை விட்டு விட்டு தான் இந்த கூட்டத்துக்கு நாங்கள் வந்தோம். கடந்த மாதமும் போதிய அளவில் அலுவலர்கள் வராத நிலையில் கூட்டத்தை புறக்கணித்தோம். இந்த மாதமும் இதே நிலைதான்.

நாங்கள் கொடுத்த மனுக்களுக்கு இதுவரை எந்த பதிலும் அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்களிடம் இருந்து வரவில்லை. வரும் மாதங்களிலாவது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு போதிய அளவில் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்