விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-30 18:20 GMT

திருவண்ணாமலை

யூரியா உடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதை கண்டித்து கடந்த 26-ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இதுகுறித்து ஓரிரு நாட்களில் விவசாயிகளை அழைத்து குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டம் எப்போது நடைபெற உள்ளது என்று எந்தவித அறிவிப்பும் நேற்று வரை தெரிவிக்கப்படவில்லை. இதனால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பலராமன் தலைமையிலான விவசாயிகள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் மீண்டும் திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் யூரியா உடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். கலப்பு உரம் தயாரித்து விற்பனை செய்யும் தனியார் உரக் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.எம். கிசான் நிதியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதுகுறித்து பலராமன் கூறுகையில், கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். எந்தவித அறிவிப்பு இல்லை. விவசாயிகள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். நேற்று இரவு வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்