விவசாய சங்க மாநில செயலாளர் வெட்டிக்கொலை
திருச்சி அருகே விவசாய சங்க செயலாளரை வெட்டிக்கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர். பாளையம் சாய்பாபா கோவில் அருகே வசித்து வந்தவர் சண்முகசுந்தரம் (வயது 60). இவர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தில் நிர்வாகியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த சங்கத்தில் இருந்து விலகி தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு மகன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி விட்டது.
2-வது திருமணம்
முதல் மனைவி இறந்து விட்டதால் சண்முகசுந்தரம் சிறுகனூர் அருகே உள்ள வங்காரத்தைச் சேர்ந்த வளர்மதி (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரத்திற்கும், வளர்மதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வளர்மதி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும் கணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் சண்முகசுந்தரம் மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் அரிவாளால் சண்முகசுந்தரத்தை வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் எம்.ஆர்.பாளையம் அருகே இருக்கும் பஞ்சமி நிலத்தை உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஒருவர் வாங்கி உள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் சண்முகசுந்தரம் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த இடத்தை வாங்கிய நபர்களுக்கும், சண்முகசுந்தரத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் மனைவி, மகன் யாரும் வீட்டில் இல்லாமல் தனியாக வசித்து வருவதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் இந்த கொலை சம்பவத்தை நடத்தி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.