நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் அவதி

அரசு உத்தரவு பிறப்பித்தும் பெரப்பேரியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2023-04-07 17:44 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், பெரப்பேரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டோர் விவசாய தொழிலை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் ஏரி, குளம், குட்டை ஆகியவை முழுமையாக நிரம்பியது. இதனால் நவரை பருவகால நெற்பயிரை அனைவரும் பயிரிட்டு அறுவடை செய்துவருகின்றனர். தொடர்ந்து விளைவித்த நெல்லை விற்க நெடுந்தூரம் கொண்டு செல்லவேண்டியுள்ளதால் தங்கள் பகுதியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற கலெக்டர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க கடந்த மாதம் 1-ந் தேதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை நெல்கொள்முதல் நிலையம் தொடங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டிவருகின்றனர். இதனால் அறுவடை செய்த நெல்லை விற்கமுடியாமல் விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெமிலி பஸ் நிலையத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்