வயல்களில் தேங்கி நிற்கும் ஊற்று தண்ணீர்-அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

கல்லல் பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வயல்களில் ஊற்று தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Update: 2023-02-25 18:45 GMT

காரைக்குடி

கல்லல் பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வயல்களில் ஊற்று தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

நெல் அறுவடை பணி

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பெய்ய வேண்டிய பருவ மழை நன்றாக பெய்ததால் இங்குள்ள கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் தங்களது வயல்களில் விவசாய பணிகளை தொடங்கி பராமரித்து வந்தனர். தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளைந்த இந்த நெல்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு முதல் பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் இன்று வரை பல்வேறு கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே உள்ள செவரக்கோட்டை, குருந்தம்பட்டு, தேவப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்கனவே பயிரிட்ட நெல்பயிர்கள் அறுவடைக்காக தயாராக இருந்த நிலையில் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

வயல்களில் ஊற்று தண்ணீர்

கல்லல் அருகே குருந்தம்பட்டு கிராமத்தில் உள்ள கண்மாய் ஓரங்களில் உள்ள வயல்களில் அறுவடைக்காக தயாராக உள்ள நெல்பயிர்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் அவற்றை அப்புறப்படுத்த வழியில்லாத நிலை உள்ளது. மேலும் தற்போது கடுமையான பனிப்பொழிவு உள்ளதால் அறுவடைக்கு தயாரான நெல் வயல்களில் அதிகளவு ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் அப்பகுதி விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து குருந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:- குருந்தம்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கடந்தாண்டு பெய்த கடும் மழையை பயன்படுத்தி நெல் விவசாய பணி நடைபெற்று வந்தது. தற்போது நெல் அறுவடை பருவத்தை எட்டி அறுவடை செய்ய உள்ள நிலையில் அருகில் உள்ள கண்மாயில் தேங்கிய தண்ணீர் வயல்களில் ஊற்றெடுத்து வருவதாலும், கடுமையான பனிப்பொழிவு காரணமாகவும் வயலில் கடுமையான ஈரப்பதம் காணப்படுகிறது.

விவசாயிகள் தவிப்பு

இதன்காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் சில வயல்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை காலி சாக்குகளை தரையில் விரித்து அதில் அறுவடை செய்த நெல்மணிகளை வைத்து பாதுகாத்து வருகிறோம். கடந்த காலங்களில் விவசாய பணியின் போது போதிய மழையில்லாமல் போவதால் நெல் பயிர்கள் கருகும் நிலையில் இருந்த வந்த நாங்கள் தற்போது மழை பெய்தும் அறுவடை காலங்களில் வயல்களில் ஈரப்பதம் காணப்படுவதால் அறுவை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம் என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்