தேயிலைக்கு உரிய விலை வேண்டி 13-வது நாளாக விவசாயிகள் போராட்டம்-ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு

தேயிலைக்கு உரிய விலை வேண்டி 13-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர்.

Update: 2023-09-13 19:00 GMT

கோத்தகிரி

தேயிலைக்கு உரிய விலை வேண்டி 13-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர்.

கூடலூர் எம்.எல்.ஏ. ஆதரவு

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டியும், தேயிலைக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்வது சம்பந்தமான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாக்குபெட்டா படுகர் நல சங்கத்தின் சார்பில் கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந்தேதி முதல் பொரங்காடு சீமை படுகர் நலச்சங்கம் தலைவர் தியாகராஜன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் 13-வது நாளான நேற்று கேர்பெட்டா, கேர்பெட்டா ஒசஹட்டி, கேர்பெட்டா நடுஹட்டி, பெந்தட்டி, கொணவக்கரை, பேட்டலாடா, தப்பக்கம்பை, ஈடுக்கொரை கிராமத்தில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் கூடலூர் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

கடைகள் அடைப்பு

இதே போல கோத்தகிரி தாலுகா வியாபாரிகள் சங்க தலைவர் கேசவன் தலைமையில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மார்கெட், டானிங்டன், ராம்சந்த் வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடைபெறும் நட்டக்கல் பகுதிக்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் காலை 2 மணி நேரம் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோக்களும் ஓடவில்லை. கேர்பெட்டா பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நட்டக்கல் போராட்ட பந்தலுக்கு ஏராளமான பெண்கள் சாலை வழியாக வரிசையாக நடந்து சென்று போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்