சின்னவெங்காயத்தை பட்டறையில் இருப்பு வைக்கும் விவசாயிகள்

போதிய விலை கிடைக்காததால் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பட்டறையில் இருப்பு வைத்து வருகிறார்கள். மேலும் வலை வீழ்ச்சியை தடுக்கவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-08-18 15:22 GMT


போதிய விலை கிடைக்காததால் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பட்டறையில் இருப்பு வைத்து வருகிறார்கள். மேலும் வலை வீழ்ச்சியை தடுக்கவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சின்ன வெங்காயம்

கோவை அருகே தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளான நரசீபுரம், ஆலாந்துறை, மத்வராயபுரம், நல்லிக்கவுண்டன்பாளையம், குப்பேபாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த பகுதியில் மட்டும் 10 ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த சின்ன வெங்காயம் அறுவடைக்கு தயாராகி உள்ளதால் அவற்றை விவசாயிகள் அறுவடை செய்து வருகிறார்கள்.ஆனால் சின்ன வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்கவில்லை. தற்போது இந்த சின்னவெங்காயத்தை விற்பனை செய்தால் சாகுபடிக்கு ஆகும் செலவுகூட கிடைக்காது. எனவே அவற்றை விவசாய நிலங்களிலேயே பட்டறை அமைத்து அதற்குள் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து வருகிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பெரியசாமி மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

பட்டறையில் இருப்பு

சின்னவெங்காயம் 65 நாள் பயிர் ஆகும். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்து அறுவடை செய்யும் வரை ரூ.75 ஆயிரம் வரை செலவு ஆகும். ஏக்கருக்கு 7 டன் வரை மகசூல் கிடைத்து, கிலோ ரூ.25-க்கும் மேல் விற்பனை செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது 4 டன் வரைதான் மகசூல் கிடைக்கிறது. அத்துடன் விலையும் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை தான் கிடைக்கிறது.

இதனால் விவசாயிகள் சின்னவெங்காயத்தை விற்பனை செய்யவில்லை. அதற்கு மாறாக தங்கள் தோட்டத்திலேயே பட்டறை அமைத்து அதற்குள் இருப்பு வைத்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் வெங்காயத்தை நன்றாக சலித்து, அதை பட்டறைக்குள் பாதுகாப்பாக வைத்து வருகிறார்கள். இந்த பட்டறையில் அதிகபட்சமாக 4 மாதம் வரை இருப்பு வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால் வெங்காயம் முளைத்துவிடும்.

தடுக்க வேண்டும்

எனவே 3 மாதம் கழித்து என்ன விலை கிடைக்கிறதோ அந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். சின்ன வெங்காயத்தை தேவைக்கு அதிகமாக சாகுபடி செய்வதால்தான் விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் தேவைக்கு ஏற்ப சாகுபடி செய்யவிடுவது இல்லை. அப்படி சாகுபடி செய்தாலும் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசே வழிவகை செய்து கொடுக்கிறது. அதுபோன்று இங்கும் செயல்பட்டு விலைவீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்