கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-05-12 19:34 GMT

திருச்சி விமானநிலைய விரிவாக்கத்துக்கு கீழக்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து, சுமார் 67 ஏக்கர் நில உரிமையாளர்கள் 21 பேர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக ஐகோர்ட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அறிவுறுத்தியதை தொடர்ந்து, நேற்று மாலை மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக விவசாயிகள் 21 பேரும் நேற்று மாலை திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு உரிய ஆவணங்களுடன் வர வேண்டும் என்று அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. அதனால் விவசாயிகள் பலரும் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தனர். ஆனால் நீண்டநேரமாகியும் அதிகாரிகள் யாரும் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கினுள் விவசாயிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விவசாயி மில்டன்குமார் கூறுகையில், விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நிலம் தர விருப்பம் தெரிவிக்காத விவசாயிகளிடம் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முறை கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. ஆனால் ஒருமுறைக்கூட அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எங்களை வரச்சொல்லி உரிய பதில் தரவில்லை. முறையான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆகையால் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இங்கேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார். இதையடுத்து அங்கு வந்த கோட்டாட்சியர் தவச்செல்வன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அடுத்த கூட்டம் நடத்த அழைப்பு அனுப்பப்படும் என்று கூறி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்