விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-07 16:55 GMT

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைதீர்வு கூட்டம்

அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென்காந்தி, வருவாய் ஆய்வாளர்கள் நந்தகுமார், ரேவதி, விநாயகம் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பேசியதாவது:-

தள்ளுபடி செய்ய வேண்டும்

புதிதாக திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் மீண்டும் கொள்முதல் பணியை தொடங்க வேண்டும். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். விவசாயப் பணியின் போது விஷ பூச்சி கடித்து உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க வேண்டும். நில அளவீடு, யூ .டி. ஆர். திருத்தம் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேல் அரசம்பட்டு ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். தோட்டக்கலை துறை சார்பில் தக்காளி, பப்பாளி விதைகள் உரிய நேரத்தில் வழங்க வேண்டும். பள்ளி கொண்டா கசக்கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில், 100 நாள் வேலை ஆட்களை கொண்டு சீரமைத்து செடிகளை நட்டு பராமரிக்க வேண்டும். கூட்டுறவு சங்க கிடங்குகளில் யூரியா தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாடு இன்றி யூரியா வழங்க வேண்டும்.

மணிலா அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் அந்த பணிகளுக்கு 100 நாள் திட்ட தொழிலாளர்களை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

அனைத்து கோரிக்கைகளையும் விரைவாக நிறைவேற்றுவதாக தாசில்தார் ரமேஷ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்