கல்லணையில் இருந்து முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் - விவசாயிகள்

குறுவை நடவு பணிகள் முடிவடையும் வரை கல்லணையில் இருந்து முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-06-26 19:26 GMT

குறுவை நடவு பணிகள் முடிவடையும் வரை கல்லணையில் இருந்து முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேட்டூர் அணை திறப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கடந்த 12-ந் தேதி திறந்து விடப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் 16-ந் தேதி காலை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டம் அறிவித்தது. இதனால் விவசாயிகள் உற்சாகத்துடன் குறுவை சாகுபடி முன்தயாரிப்பு பணிகளை கவனித்தனர். பிரதான ஆறுகளில் இருந்து கிளை வாய்க்கால்களில் வரும் தண்ணீரை கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்து விதைப்பு செய்து வருகின்றனர்.

தண்ணீர் திறப்பு குறைப்பு

நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் நிலங்களை தயார் செய்யும் பணிகளையும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்தநிலையில் கல்லணையில் இருந்து நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டது.

கல்லணையில் இருந்து நேற்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் 204 கன அடி, வெண்ணாற்றில் அதிக அளவாக 5,005 கன அடி, கல்லணை கால்வாயில் 701 கன அடி, கொள்ளிடத்தில் 1,515 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கல்லணையில் இருந்து பிரதான ஆறுகளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முறைப் பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

குறுவை நடவு முடியும் வரை...

தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு இருப்பது கால்வாய் பாசனத்தை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. குறுவை நடவு பணிகள் முடிவடையும் வரை கல்லணையில் இருந்து அனைத்து ஆறுகளிலும் முழு அளவில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று விவசாயகிள் வலியுறுத்தி உள்ளனர்.

நேற்று நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 94.10 அடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் 107.17 அடியாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்