குறுவை தொகுப்பு திட்டத்தை விரைந்து பெற்றுத்தர வேண்டும்- விவசாயிகள்
குறுவை தொகுப்பு திட்டத்தை விரைந்து பெற்றுத்தர வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
குறுவை தொகுப்பு திட்டத்தை விரைந்து பெற்றுத்தர வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மின்வாரியம் வேளாண்மை துறை நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
குறுவை தொகுப்பு திட்டத்தை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முறைப்பாசனம்
காவிரியில் குறுவை சாகுபடிக்காக முறைபாசன முறையை முற்றிலும் கைவிட வேண்டும். தற்போது சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருவதால் தொடர்ந்து 1,500 கன அடிக்கு குறையாமல் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
திருமண்டங்குடியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு உரிய தீர்வு காண வேண்டும். கும்பகோணம் அருகே கடிச்சம்பாடியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
அரசு உதவிகள்
தூர்வாரும் பணிகள் பல இடங்களில் அறிவித்தபடி நடைபெறவில்லை. எனவே அதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடி திட்டமிட்டபடி நடைபெற அரசின் உதவிகளை உரிய காலகட்டத்தில் வேளாண்மை துறை வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, விவசாயிகளின் கோரிக்கைகள் அந்தந்த துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.