உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாயில் புதர்கள் அகற்றப்படுமா?- விவசாயிகள்
பூதலூர் ஒன்றிய பகுதியில் உள்ள உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாயில் புதர்கள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
பூதலூர் ஒன்றிய பகுதியில் உள்ள உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாயில் புதர்கள் அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாய்
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நடைபெறும் வேளாண் பணிகளுக்காக நடப்பு ஆண்டு முன் எப்போதும் இல்லாத வகையில் மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று, மகசூலும் அதிக அளவில் கிடைக்கப்பெற்றது.
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றிய பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் ஏரிகளில் நீர் நிரப்பி அதன் மூலம் ஒருபோக சாகுபடி நடைபெறும்.
நடப்பாண்டு உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாயின் மூலம் தண்ணீர் ஆகஸ்டு மாதத்தில் திறக்கப்பட்டது. இதில் உள்ள 16-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி அதன் மூலம் 3500 ஏக்கர் பரப்பில் ஒருபோக நெல் சாகுபடி நடைபெற்று உள்ளது.
புதர்கள்
உய்யக்குண்டான் நீட்டிப்புக் கால்வாயில் தலைப்பு உள்ள பகுதியில் வாழவந்தான் கோட்டை ஏரியிலிருந்து நீர் ஆகஸ்டு மாதத்தில் திறக்கப்பட்டாலும், அப்போது தொடர்ந்து பெய்த பெருமழை காரணமாக இந்த நீட்டிப்பு கால்வாய் பாசன பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி சாகுபடி நடைபெற்று உள்ளது.
இதற்கிடையில் தலைப்பில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாய் தண்ணீர் செல்லும் கீழ்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால், அதிலிருந்து தண்ணீர் அதன் மேலே உள்ள காட்டு வாரி மூலம் வெளியேறியது. இதனால் தலைப்பில் இருந்து கடைமடை வரை உய்யக்குண்டான் கால்வாயில் தண்ணீர் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் தலைப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாயில் ஆகாயத்தாமரைச் செடிகளும், புதர்களும் அடர்ந்து வளர்ந்துள்ளது.
பயிர்களை காப்பாற்ற...
கீழ்ப்பால உடைப்பை தற்போது சீரமைக்க இயலாது என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்து, மாற்று ஏற்பாடாக கட்டளை மேட்டு கால்வாய் மூலம் உய்யக்குண்டான் கால்வாய் பாசன ஏரிகளுக்கு தண்ணீர் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது நடவு செய்துள்ள விவசாயிகள் மத்தியில் உய்யக்குண்டான் கால்வாய் மூலம் தண்ணீர் முறையாக வந்தால் மட்டுமே முழுமையாக தங்கள் பயிரை காப்பாற்ற முடியும் என்று கூறுகின்றனர்.
தலைப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பாசன நீரோட்டத்திற்கு தடை ஏற்படும் வகையில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றி, கீழ்ப்பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து அந்த இடத்தில் ஒரு மாற்று ஏற்பாடாக தண்ணீரை குழாய் மூலம் சிறு தொலைவுக்கு கொண்டு வந்து பூதலூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.