சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் வேண்டுகோள்

சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-26 19:24 GMT

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் விவசாயி ராமராஜ் பேசுகையில், பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு, கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும். பருத்திக்கு போதிய விலை கிடைக்க, கொள்முதல் செய்ய, அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

காவிரி நீர் கொண்டு வர...

விவசாயி பூபதி பேசுகையில், மகசூல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளம் விதை கிலோ ரூ.400-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவாகிறது. மானிய விலையில் விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். விவசாயி ஜெயராமன் பேசுகையில், திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து, துறையூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்துக்கு காவிரி நீர் கொண்டு வந்து நம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் அந்த நீரை நிரப்பி பாசனத்திற்கு வழிவகை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மின் தளவாட பொருட்கள் பற்றாக்குறை

விவசாயி செல்லதுரை பேசுகையில், பயிர்க்கடன் திருப்பி செலுத்தும் காலம் ஓராண்டாக இருந்ததை, 8 மாதமாக குறைத்தது விவசாயிகளை பெரிதும் பாதிக்கும். அதனை மீண்டும் ஓராண்டாக அறிவிக்க வேண்டும். இலவச மின் இணைப்பு அனுமதி பெற்ற விவசாயிகள் பலர் மின்சாரம் பெற முடியவில்லை. மின்கம்பி, மின்கம்பம் உள்ளிட்ட மின் தளவாட பொருட்கள் பற்றாக்குறையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. மின் தளவாட பொருட்கள் தடையின்றி வழங்கி இலவச மின் இணைப்பு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். விவசாயி ரமேஷ் பேசுகையில், முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்ட நபர்களுக்கு மீண்டும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

நன்றி தெரிவித்த விவசாயிகள்

கூட்டத்தில் விவசாயிகள் எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கப்பட்டதற்கும், முதல்-அமைச்சரின் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 1,317 மின் இணைப்புகளை விட கூடுதலாக 396 மின் இணைப்புகள் வழங்கிய மின்சார வாரியத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து பேசினர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவலிங்கம் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்