நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு
கிடாரம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கிடாரம்பட்டி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் சுற்றுவட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். இந்தநிலையில் இந்த நேரடி கொள்முதல் நிலையத்தை காட்டுப்பகுதியில் உள்ள வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது எனவும், ஏற்கனவே இயங்கி வந்த பொதுவான இடத்தில் இயங்க வேண்டும் என கோரி புதுக்கோட்டையில் நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை நேற்று விவசாயிகள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தையும் விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பின் விவசாயிகள் கலைந்து சென்றனர்.