கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கோவை அருகே தொழில் முனையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-30 18:45 GMT

கோவை

கோவை அருகே தொழில் முனையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழில் முனையம்

கோவை அருகே சூலூர் தாலுகாவில் வாரப்பட்டி, குளத்துப்பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 421.41 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் ராணுவ தொழில்நுட்ப பூங்கா, தொழில் முனையம் அமைய இருக்கிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொழில்முனையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குளத்துப்பாளையம், வாரப்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட நேற்று வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

காத்திருப்பு போராட்டம்

இதனால் பொதுமக்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில்,

சூலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், பூசாரிபாளையம், வி.சந்திராபுரம், குளத்துப்பாளையம், புளியமரத்துப்பாளையம், வாரப்பட்டி, சுல்தான்பேட்டை பகுதியில் 421.41 ஏக்கரில் தொழில் முனையம் அமைய உள்ளதாக அறிந்தோம்.

நாங்கள் விவசாயத்துக்கு கிணற்று நீரையே நம்பியுள்ளோம். இங்கு தொழில் முனையும் அமையுமானால் பவுண்டரிகள், கெமிக்கல் தயாரிப்பு நிறுவனங்கள் வரும். இதனால் நீலத்தடி நீர் மாசுபடும் அபாயம் உள்ளது. மேலும் இங்கிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் மக்கள் பாதிக்கப்பட்டும், மேலும் சுற்றுச்சுழல் மாசுபடும். இந்த நிலையில் தொழில் முனையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். எனவே இதனை கைவிடவும், எங்கள் வாழ்வாதாரத்தை காக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்