பிரதமருக்கு மனு அனுப்பி விவசாயிகள் போராட்டம்

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 விலை நிர்ணயிக்க கோரி பிரதமருக்கு மனு அனுப்பி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-20 20:30 GMT

ஊட்டி

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 விலை நிர்ணயிக்க கோரி பிரதமருக்கு மனு அனுப்பி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 65 ஆயிரம் விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு உள்ளனர். பச்சை தேயிலைக்கு கடந்த பல ஆண்டுகளாக உரிய விலை கிடைக்க வில்லை. எனவே, பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி ஊட்டியில் நாக்குபெட்டா, படுகர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வருகிற 31-ந் தேதிக்குள் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யாவிட்டால், மாவட்டம் முழுவதும் உள்ள 65,000 விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி நேற்று பிரதமர் மோடி, மத்திய வர்த்தகத் துறை மந்திரி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். நாக்குபெட்டா படுகர் நல சங்க ஒருங்கிணைப்பாளர், தொதநாடு நலச்சங்க தலைவர் பாபு, மேற்கு நாடு நலச்சங்க தலைவர் தாத்தன், புறங்காடு சீமை தலைவர் தியாகராஜன் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

மனு அனுப்பும் போராட்டம்

இதேபோல் நேற்று முதல் 400 கிராமங்களில் இருந்தும் பிரதமர் மற்றும் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் தொடங்கி உள்ளது. இதுகுறித்து சங்கத்தினர் கூறியதாவது:- பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15 வரை மட்டுமே கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. உற்பத்தி செலவை கணக்கிடும்போது இது கட்டுப்படி ஆகாததால் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு ரூ.22.50 ஆகிறது என்றும், அதிலிருந்து 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயம் செய்து ரூ.33.75 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சாமிநாதன் கமிட்டி அறிக்கை அளித்து உள்ளது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

ரேஷன் கடைகள்

அந்த மனுவில், ரேஷன் கடைகள் மூலம் தேயிலைத்தூளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இதற்கிடையே வருகிற 31-ந் தேதிக்குள் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி மாவட்டத்தில் உள்ள 65 ஆயிரம் தேயிலை விவசாயிகளை ஒன்று திரட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்