தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்

கோவையில் விவசாயிகள் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-31 20:00 GMT

கோவை

கோவையில் விவசாயிகள் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேங்காய் விலை குறைவு

கோவை மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தென்னை விவசாயம் செய்து வருகிறார்கள். குறிப்பாக பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களை விவசாயிகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தேங்காய் விலை மிகவும் குறைந்து உள்ளது. ஒரு கிலோ தேங்காய் ரூ.8-க்குதான் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்குவதாக கூறப்படுகிறது. எனவே இந்த விலை குறைவை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேங்காய்களை உடைத்து போராட்டம்

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. சண்முகம் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் தேங்காய்க்கு உரிய விலை வழங்கக்கோரி தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிச்சென்று வெளியே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க ரேஷன் கடைகள் மூலம் தேங்காய்கள் மற்றும் தேங்காய் எண்ணையை விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். அத்துடன் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாங்கள் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்