டிராக்டர்களில் வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-26 18:45 GMT

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்,

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவிடம் வழங்குவதுடன் அவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

இதில் கலந்து கொண்ட விவசாயிகள் தாங்கள் விவசாயத்துக்கு பயன்படுத்தும் டிராக்டர்களில் வந்து கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

முன்னதாக சு.பழனிசாமி நிருபாகளிடம் கூறுகையில், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தால்தான் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும்.

மின்சார சட்டதிருத்த மசோதாவை கொண்டு வந்தால் இலவச மின்சாரம் கிடைக்காது. எனவே விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்றார்.

இதில் கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க ஆறுசாமி, மக்கள் அதிகாரம் அமைப்பு மூர்த்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழ்நம்பி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்