கொடிவேரி அணை அருகே சாயப்பட்டறை அமைப்பதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கொடிவேரி அணை அருகே சாயப்பட்டறை அமைப்பதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடத்தூர்
கொடிவேரி அணை அருகே சாயப்பட்டறை அமைப்பதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இதன் அருகே உள்ள பவானி ஆற்றங்கரையில் ஏற்கனவே இயங்கி வந்த சாயப்பட்டறை மூடப்பட்டது. தற்போது அந்த இடத்தில் வேறொரு தனியார் நிறுவனம் ஒன்று சாயப்பட்டறை தொழிற்சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதனை கண்டித்து கோபி-சத்தி மெயின் ரோட்டில் உள்ள கொடிவேரி அணை பிரிவு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதையொட்டி ஏராளமான போலீசார் காலை முதலே அங்கு குவிக்கப்பட்டனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மேலும் கொடிவேரி அணை பிரிவில் ஏராளமான ஆண், பெண் விவசாயிகளும் கோரிக்கைகள் குறித்த பதாகைகளுடன் ஒன்று திரண்டனர். பின்னர் சாயப்பட்டறை அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோஷங்களும் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தளபதி தலைமை தாங்கினார். காலிங்கராயன் பாசன பகுதி சங்கத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வைத்தார். கீழ்பவானி ஆசன சபை தலைவர் ராமசாமி வரவேற்று பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்பின்னர் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு விவசாயிகள் சென்று ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினியிடம் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.