பாலாற்றில் மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

கூத்தம்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் மணல்குவாரி அமைப்பது தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், மணல்குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரியை முற்றுகையிட்டனர்.

Update: 2023-09-25 17:34 GMT

கருத்துகேட்பு கூட்டம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் கூத்தம்பாக்கம் அணங்காநல்லூர், அகரம்சேரி, கொத்தகுப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு இடையே பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கடந்த வாரம் காட்பாடியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில் மணல்குவாரி அமைப்பது குறித்து அகரம் சேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

பொதுப்பணித்துறை பொறியாளர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொய்யான தகவல்

முதலில் பொதுப்பணித்துறை சார்பில் மணல் அமைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக விளக்கம் அளித்தனர். பாலாற்றை ஒட்டி எந்த கிராமங்களும் இல்லை, இந்தப் பகுதியில் மணல் அதிகமாக உள்ளது, நிலத்தடி நீர் மட்டம் எந்த வகையிலும் குறையாது, குடிநீரில் உப்புத்தன்மை குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பொய்யான தகவல்களை தெரிவிப்பதாகக்கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்த அதிகாரியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசினார்.

அப்போது அணங்காநல்லூர், கூத்தம்பாக்கம், அகரம் சேரி, கொத்தகுப்பம் ஆகிய பகுதிகள் ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பாலாற்றில் இருந்து 150 மீட்டர் தூரத்திலேயே ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ராட்சத குடிநீர் பைப்புகள் பாலாற்றின் வழியாக செல்கிறது. இப்படி பட்ட பகுதியில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என விதி இருக்கும் போது பாலாற்றங்கரை ஓரம் எந்த வீடுகளும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

விவசாயிகள் எதிர்ப்பு

இது போன்ற தவறான தகவல்களை வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகளில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடப்பதாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, அனைத்து குவாரிகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தவறான தகவல்களை கொடுத்து மணல் குவாரி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். எனவே இந்தப் பகுதியில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என அவர் தெரிவித்தார். இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் மணல் குவாரி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்