விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-06 19:09 GMT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கை தட்டும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நீலகண்டன் விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் கணேசன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் சான்று ஆவணங்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய காலக்கெடுவிற்குள் வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தெந்த கிராமங்களில் 'அ' பதிவேடு ஆவணங்கள் சேதமடைந்துள்ளது என்பது குறித்த விவரத்தினை கண்டறிந்து, விவசாயிகளுக்கு 'அ' பதிவேடு நகல் கிடைத்திட ஆவண செய்ய வேண்டும். விவசாயிகளின் பட்டா நிலம், அவர்களுக்கு தெரியாமலேயே தரிசு நிலம் மற்றும் நத்தம் நிலமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை தடுத்திட விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் வருவாய்த்துறை மூலம் கிராமங்களில் அறிவிப்பு செய்து விழிப்புணர்வு கூட்டம் நடத்திட வேண்டும். தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கரும்பிற்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு கை தட்டினர். விவசாயிகளின் இந்த நூதன ஆர்ப்பாட்டத்தை பஸ் பயணிகள் வியப்புடன் பார்த்து சென்றனர். முன்னதாக விவசாயிகள் உழவர் பெருந்தலைவரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவன தலைவருமான மறைந்த நாராயணசாமி நாயுடுவின் 99-வது பிறந்த நாளையொட்டி நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள, அவரது முழு உருவ சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்