கொள்முதல் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்

திருவோணம் அருகே நெல் கொள்முதல் நிலையம் தனியார் இடத்தில் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல் கொள்முதல் பணியை தடுத்து நிறுத்தி ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-02-01 21:39 GMT

ஒரத்தநாடு;

திருவோணம் அருகே நெல் கொள்முதல் நிலையம் தனியார் இடத்தில் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல் கொள்முதல் பணியை தடுத்து நிறுத்தி ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

நெல் கொள்முதல் நிலையம்

திருவோணம் ஒன்றியம் வெங்கரை ஊராட்சிக்குட்பட்ட இடையங்காடு கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக அந்த இடத்தில் தகர பந்தல் அமைக்கப்பட்டு, நெல் தூற்றும் எந்திரமும் உள்ளிட்ட தளவாட பொருட்கள் கடந்த 15 தினங்களுக்கு முன்பு கொண்டு வந்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக அங்கு கொண்டு வந்து குவியல்- குவியிலாக குவித்து வைத்துள்ளனர்.

போராட்டம்

இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடம் தனி நபருக்கு சொந்தமானது என்றும், இங்கு கொள்முதல் நிலையத்தை திறந்து செயல்படுத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். மேலும் நெல் கொள்முதல் நிலையத்தை பொது இடத்தில் திறக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிடம் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக அங்கு நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை. இதனால் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பல தினங்களாக காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையில் அங்கு விற்பனைக்காக குவித்து வைத்துள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை சம்பந்தப்பட்ட நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்று போலீஸ் பாதுகாப்புடன் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய தொடங்கினர்.

பரபரப்பு

அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் இந்த இடத்தில் வைத்து நெல் கொள்முதல் செய்யக்கூடாது எனக்கூறி அப்பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நெல் கொள்முதல் பணியை நிறுத்தி விட்டு, நெல் தூற்றும் எந்திரம் உள்ளிட்ட தளவாட பொருட்களையும் அங்கிருந்து ஊழியர்கள் எடுத்து சென்று விட்டனர்.

நடவடிக்கை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் எந்த இடத்தில் செயல்படுவது என்பதில் ஒரே கிராமத்தில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருப்பதால், இதில் உயர் அதிகாரிகளின் உரிய வழிகாட்டுதலை பெற்று இக்கிராமத்தில் நெல் கொள்முதல் பணிகள் தொடங்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு, விவசாயிகள் அறுவடை செய்துள்ள நெல்லை கொள்முதல் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்