உப்பளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
திருப்புல்லாணி அருகே ஆனைகுடி பகுதியில் உப்பளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்புல்லாணி அருகே ஆனைகுடி பகுதியில் உப்பளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உப்பளம்
திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட களரி, பள்ளமோர்குளம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஆனைகுடி கண்மாயை நம்பி உள்ளனர். இந்த கண்மாய் நீரை நம்பி ஏராளமான விவசாயிகள் நெல்விவசாயம் செய்து வருகின்றனர். நெல் தவிர மிளகாய், பருத்தி போன்றவற்றையும் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆனைகுடி கண்மாயின் நீர்வரத்து பகுதியில் தனியார் நிறுவனத்தினர் உப்பளம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஆனைகுடி, பள்ளமோர்குளம், பால்கரை, அச்சடிபிரம்பு, கொடிக்குளம், வெண்குளம், வித்தானூர் உள்ளிட்ட கிராம மக்கள் தங்களுடைய வாழ்வாதாரமான குடிநீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றுக்கு ஆதாரமாக ஆனைகுடி கண்மாய் தண்ணீர் உள்ளது. அதனை நம்பி இப்பகுதி மக்கள் உள்ளதால் உப்பளம் அமைக்க கூடாது. இதனால் நிலத்தடி நீர்வளம், குடிநீர், விவசாயம், கால்நடைகள் பாதிக்கப்படும் என்று கூறிவருகின்றனர்.
முற்றுகை
மேலும் உப்பளம் அமைக்க கூடாது என்று மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றனர். கோர்ட்டு உத்தரவிட்ட நிலையிலும் தொடர்ந்து உப்பள பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் நேற்று காலை உப்பள பகுதியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து உப்பள பணிகளை நிறுத்திய அதிகாரிகள் அங்கு பணியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர். அதன்பின்னரே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், உப்பள பணிகளை மேற்கொள்ள கூடாது. இனி இதுபோன்ற பணிகள் நடைபெற்றால் கடும் போராட்டம் நடத்தப்படுவதோடு அரசின் அடையாள அட்டைகளை ஒப்படைத்துவிடுவோம் என்றனர்.