விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை குறித்து காவிரி ஆணையத்தில் விவாதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தஞ்சையில், விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
மேகதாது அணை குறித்து காவிரி ஆணையத்தில் விவாதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தஞ்சையில், விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் நேற்று காலை கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளை மத்திய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும். மேகதாது அணை கட்ட மத்திய அரசு ஆதரவு அளிக்கக்கூடாது. காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க மத்திய அரசு சட்டப்பூர்வ அனுமதி அளித்திருப்பதை கண்டிப்பதுடன், மேகதாது அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.