தாலுகா, கோட்டாட்சியர் அலுவலகங்களில் குறைதீர்வு கூட்டம் நடத்தக்கோரி விவசாயிகள் மனு

கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் நடைமுறையை மாற்றி தாலுகா, கோட்டாட்சியர் அலுவலகங்களில் குறைதீர்வு கூட்டம் நடத்தக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர். முன்னதாக அவர்கள் வேங்கிக்கால் ஏரியில் காகித கப்பல் விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-21 16:04 GMT


கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் நடைமுறையை மாற்றி தாலுகா, கோட்டாட்சியர் அலுவலகங்களில் குறைதீர்வு கூட்டம் நடத்தக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர். முன்னதாக அவர்கள் வேங்கிக்கால் ஏரியில் காகித கப்பல் விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் கல்வி உதவித்தொகை, சாலை வசதி, வீட்டுமனை பட்டா, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, அடையாள அட்டை, முதியோர் உதவித்தொகை என்பன உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அசம்பாவித செயலில் யாரும் ஈடுபடாமல் தடுக்க போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

நூதன போராட்டம்

கூட்டத்தில் உழவர் பேரவை சார்பில் வாக்கடை புருஷோத்தம்மன் தலைமையிலான விவசாயிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சேவைகளை பெற வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனுக்கள் தருகின்றனர்.

இந்த நடைமுறையை மாற்றி அந்தந்த தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனுக்கள் பெறப்பட்டு ஒப்புதல் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தால் அந்த மனு எங்கு, யாரிடம் சென்றது, யாரை அணுகுவது என்று தெரியாமல் மன உளைச்சல் அடைகின்றனர். இதனால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரியில் தாலுகா அலுவலகங்களில் குறைதீர்வு கூட்டம் நடத்தக்கோரி கோஷங்கள் எழுப்பியபடி காகித கப்பல் விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தார் சாலை வசதி

ஜவ்வாதுமலை ஒன்றியம் பலாமரத்தூர் மலைவாழ் பழங்குடி மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள பலாமரத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களான புளிச்சக்கொட்டை, வாழக்காடு, சேராமந்தை, நாச்சாமலை மற்றும் மேல்சிலம்படி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களான பதரி, சின்ன கூத்தனேரி, பெரிய கூத்தனேரி, மோலையனூர் ஆகிய 8 கிராமங்களில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

எங்கள் கிராமங்கள் ஜமுனாமரத்தூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. எங்கள் கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ளது.

மழை மற்றும் காட்டாறு வெள்ளத்தால் அரித்து செல்லப்பட்டு மிக, மிக மோசமான பாதைகளாக உள்ளது. மிக அவசரமான, ஆபத்தான சூழ்நிலைகளில் கர்ப்பிணிகளின் பிரசவ நேரங்களில் ஆம்புலன்சு வாகனமும் வர முடிவதில்லை.

எங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க 15 கிலோ மீட்டர் சென்று வருவது மிகவும் கடினமாக உள்ளது. எனவே எங்களுக்கு தார் சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்