10 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பொலிவு பெறும் உழவர் சந்தைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தவும், காய்கறிகள் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டு புதுப்பொலிவாக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
உழவர் சந்தை
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தை. விவசாயிகள் நேரடியாக தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வந்து சந்தையில் விற்கும் வகையில் உழவர் சந்தை எனும் திட்டத்தை தொடங்கினார்.
இதில் விவசாயிகளுக்கு கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல கடைகளுக்கு வாடகை கிடையாது. இலவசமாக தராசுகள் வழங்கப்படுகின்றன. இலவச மின் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
6 இடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, விராலிமலை, ஆலங்குடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டையில் அமைந்துள்ள உழவர் சந்தை நகரின் மையப்பகுதியில் உள்ளதால் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் வந்து வியாபாரம் செய்கின்றனர். இதில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளன. கழிப்பறை வசதியும், குடிநீர் வசதியும் உள்ளது. விவசாயிகள் அமைத்துள்ள கடைகளில் மேற்கூரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல சிமெண்டு தள பாதை அமைக்கப்பட்டுள்ளது.
காய்கறிகளின் விலை விவரம் டிஜிட்டல் பலகையில் தெரியும் படி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் கடைகளின் தரைத்தளத்தை உயர்த்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். வீணாகும் மற்றும் அழுகும் காய்கறிகளில் இருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை உழவர் சந்தையின் முகப்பு பகுதியின் அருகே காய்கறிகள், குப்பைகள் கொட்டப்படும் இடம் சுகாதார கேடாக உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேம்படுத்த திட்டம்
உழவர் சந்தைகளில் பெரிய அளவில் மேம்படுத்த நடவடிக்கை எதுவும் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு உழவர் சந்தைகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் உழவர்சந்தைகளில் தற்போது இருக்கும் நிலையில் இருந்து மேம்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுத்த தொடங்கி உள்ளனர். அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உழவர் சந்தைகள் புதுப்பொலிவுடன் மாற உள்ளது.
உழவர் சந்தைகள் பற்றி பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
விலை குறைவு
பொதுமக்கள் மோகனசுந்தரம் கூறுகையில், ''நான் உழவர் சந்தையில் தொடர்ந்து காய்கறிகள் வாங்கி வருகிறேன். இங்கு காய்கறிகள் நல்ல முறையில் உள்ளது. மேலும் வெளி மார்க்கெட்டில் உள்ள விலையை விட சற்று குறைவாக தான் இருக்கிறது. இதேபோல சில நேரங்களில் காய்கறிகளின் விலை கடுமையாக உயரும்போது கூட உழவர்சந்தையில் விலை சற்று குறைவாக தான் இருக்கும். அனைத்து விதமான காய்கறிகளும் இங்கு கிடைக்கிறது. காய்கறிகள் பசுமையாக இருக்கும். அன்றாடம் தேவையான அளவை வாங்கி கொள்வேன்'' என்றார்.
இயற்கை விவசாயம்
விவசாயி செல்வகுமார்:- ''நான் எனது தோட்டத்தில் விளையும் கத்திரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், சுண்டைக்காய், தேங்காய் ஆகியவற்றை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறேன். இதுதவிர தக்காளி உள்பட சில காய்கறிகளையும் வாங்கி விற்கிறேன். இங்கு உழவர் சந்தை ஆரம்பித்த காலத்தில் இருந்தே எனது அம்மா வியாபாரம் செய்து வந்தார்கள். அதன்பின் கடந்த 11 ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்கிறேன். இதில் நல்ல வியாபாரம் நடக்கிறது.
ஒரு சில நாட்கள் காய்கறிகள் கொஞ்சம் மீதியானால் அவற்றை வெளியில் விற்றுவிடுவேன். வீணாகி போகும் காய்கறிகளை இங்கேயே ஓரமாக கொட்டிவிடுவது உண்டு. ஒரு முறை என்னிடம் கத்திரிக்காய் வாங்கி சென்ற நபர் வீட்டில் பயன்படுத்திய பின் அந்தமானுக்கு மொத்தமாக கத்திரிக்காய் தேவைப்படுவதாக கூறினார். அதனால் அவ்வப்போது 300 கிலோ வரை அந்தமானுக்கு இங்கிருந்து கத்திரிக்காய் செல்கிறது. அவர்களாகவே வண்டியில் வந்து தோட்டடத்தில் இருந்து கொண்டு செல்வார்கள். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் கத்திரிக்காய் என்பதால் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. நான் செய்யும் விவசாயம் இயற்கை முறை சார்ந்ததாகும். அதனால் வாடிக்கையாளர்களும் எனது கடையில் காய்கறிகள் அதிகம் வாங்குவார்கள்'' என்றார்.
நல்ல முறையில் வியாபாரம் நடக்கிறது
விவசாயி பூமயில்:- ''முதலில் கீரைகளை தோட்டத்தில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்தேன். அதன்பின் காய்கறிகள் விளைவித்து உழவர்சந்தைக்கு கொண்டு வருகிறேன். ஒரு சில காய்கறிகளை வெளியில் வாங்கி வந்தும் விற்பனை செய்வேன். இங்கு நல்ல முறையில் வியாபாரம் நடக்கிறது. பண்டிகை நாட்கள், விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு சில நாட்கள் வியாபாரம் மந்தமாக இருக்கும். விலையும் கட்டுப்படியாகிற விலையில் விற்பதால் பெரிய அளவில் நஷ்டம் இல்லை. காய்கறிகள் விற்பனையாகாத நாட்களில் விடுதிகள், ஓட்டல்கள் உள்பட தேவைப்படுகிறவர்களுக்கு கொண்டு சென்று விற்பது உண்டு'' என்றார்.
புதுக்கோட்டையில் மாலை நேர உழவர் சந்தை விரைவில் தொடக்கம்
வேளாண் விற்பனை மற்றும் வணித்துறை துணை இயக்குனர் சங்கரலட்சுமி கூறுகையில், ''தற்போது உழவர் சந்தைகள் அனைத்தும் புதுப்பொலிவாக மாற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் அதிகமான பொதுமக்கள் வருகை காணப்படுகிறது. பசுமையான மற்றும் தரமான காய்கறிகள் நுகர்வோர்களுக்கு கிடைக்கிறது. சில்லரை மார்க்கெட் விலையை விட குறைந்த விலையில், சரியான எடையில் கிடைக்கிறது. இதேபோல மற்ற இடங்களிலும் உழவர் சந்தைகள் நல்ல முறையில் இயங்குகிறது. விராலிமலையில் உள்ள உழவர் சந்தையை புதிதாக வேறு ஒரு இடத்தில் அமைக்க முடிவு செய்துள்ளோம். பொன்னமராவதியில் புதிதாக ஒரு உழவர் சந்தை அமைக்கப்பட உள்ளது. மேலும் அங்கு குளிர்பதன கிடங்கு அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆலங்குடி உழவர் சந்தையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை உழவர் சந்தையையும் மேம்படுத்தப்பட உள்ளது. புதுக்கோட்டையில் மட்டும் தற்போது உள்ள காலை நேரத்தோடு மாலை நேரமும் உழவர் சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்படுகிறது. மாலை நேர உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுவினரின் மூலம் தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், சிறுதானியங்கள், பராம்பரிய அரிசிகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட உள்ளது. இதேபோல வீணாகும் காய்கறிகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் எந்திரம் புதுக்கோட்டையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதில் இயற்கை உரம் தயாரித்து அதனை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோாம். மாவட்டத்தில் அனைத்து உழவர்சந்தைகளிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருகையை அதிகரிக்க அனைத்துவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளிடம் காய்கறிகளை கொண்டு வந்து நேரிடையாக விற்பனை செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது'' என்றார்.
விவசாயிகளிடம் விழிப்புணர்வு தேவை
கறம்பக்குடி பட்டமாவிடுதியை சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில், கறம்பக்குடியில் 27 கடைகளுடன் உள்ள உழவர் சந்தை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்தது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபிறகு உழவர் சந்தையை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் சாலையோரங்களில் விற்பனை செய்வதிலும், வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பதிலும் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உழவர் சந்தையால் கிடைக்கும் பலன்கள் குறித்து எங்கள் பகுதி விவசாயிகள் அறியவில்லை. தரை கடைகளில் விற்கப்படும் கீரை வகைகள், கிழங்குகள் உள்ளிட்ட விளைபொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யவும், நுகர்வோரை உழவர் சந்தைக்கு வர செய்யும் நடவடிக்கைகளிலும் வேளாண்மை துறை அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும். உழவர் சந்தையில் விளை பொருட்களை விற்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற விழிப்புணர்வு அவசியம்.