உழவர் சந்தை, கழிவுநீர் கால்வாய் பணிகளை கலெக்டர் ஆய்வு

பள்ளிகொண்டாவில் நடைபெற்று வரும் உழவர் சந்தை மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வுசெய்தார்.

Update: 2022-12-05 18:04 GMT

பள்ளிகொண்டாவில் நடைபெற்று வரும் உழவர் சந்தை மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வுசெய்தார்.

கலெக்டர் ஆய்வு

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பஸ் நிறுத்தம் அருகே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் உழவர் சந்தை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உழவர் சந்தை கடைகள் கட்டுவதற்காக சுகாதார வளாகம் அருகே தோண்டப்பட்ட பள்ளங்களை பார்த்த அவர் சுகாதார வளாகம் வலுவிழுந்த நிலையில் உள்ளதால் அதன் அருகில் பள்ளம் தோன்டினால் சுகாதார வளாக கட்டிடம் இடிந்து விழுந்து விடும். ஆகவே சுகாதார வளாகம் அருகில் உள்ள பள்ளங்களை மூட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனையடுத்து குடியாத்தம் ரோட்டில் கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை ஆய்வு செய்தார். அப்போது மேற்கு திசையில் சாலையை விட ஒரு அடி உயரத்திற்கு மேல் கால்வாயின் உயரம் உள்ளதால் அந்தப் பகுதியில் உள்ள கடைகளுக்கும், மருத்துவமனைக்கும் செல்வதற்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றார்கள். எனவே அந்த உயரத்தை குறைத்து சாலையின் அளவிற்கு அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

குப்பை கொட்டக்கூடாது

கடைகளில் பயன்படுத்தும் குப்பைகளை சாலையில் கொட்டி வருவதை பார்த்த கலெக்டர், சாலைகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் கடைகளுக்குள்ளே வைத்து பேரூராட்சி குப்பை வண்டிகளில் கொட்ட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் குடியாத்தம் ரோடில் கிழக்கு திசையில் கட்டி முடிக்கப்பட்ட கால்வாய் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

கால்வாயில் சிலாப்புகள் போடாமல் ஆங்காங்கே திறந்த நிலையில் உள்ள பகுதிகளில் உடனடியாக சிலாப்புகள் அமைத்து மூட வேண்டும் எனவும் ஒப்பந்ததாரிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பள்ளிகொண்டா அருகே அகரம் ஆறு உழவர் உற்பத்தியாளர் சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களை ஆய்வு செய்தார்.

விவசாய பொருட்கள்

அங்கு உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சாமை உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததை பார்வையிட்டார். அப்போது உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே இதுபோன்ற உற்பத்தி நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஆய்வின்போது அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் ராமலிங்கம், வேளாண்மை துறை அதிகாரிகள், ஆய்வாளர் சுதா, பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன், துணைத்தலைவர் வசிம்அக்ரம் மற்றும் அகரம் ஆறு உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர்கள், உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்