நுகர்பொருள் வாணிபகழக அலுவலகத்தை விவசாயிகள் கொட்டும் மழையில் முற்றுகை

மன்னார்குடி அருகே இடையர்நத்தம் நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் நியமிக்கக்கோரி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை விவசாயிகள் கொட்டும் மழையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-02 18:45 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே இடையர்நத்தம் நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் நியமிக்கக்கோரி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை விவசாயிகள் கொட்டும் மழையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பா, தாளடி சாகுபடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது குறுவை மற்றும் தாளடி நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

எந்திரங்கள் மூலம் அறுவடை பணிகள் நடைபெறுவதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அதிக அளவிலான நெல் மூட்டைகள் வர தொடங்கி உள்ளன.

விவசாயிகள் முற்றுகை போராட்டம்

மன்னார்குடி அருகே இடையர்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் 15 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டியல் எழுத்தர் நியமிக்காததால் நெல் கொள்முதல் பணி நடைபெறவில்லை என கூறப்படுகிறது. பட்டியல் எழுத்தரை நியமிக்க அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மன்னார்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலக வாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பட்டியல் எழுத்தரை உடனடியாக நியமிக்ககோரி கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இடையர்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு பட்டியல் எழுத்தரை நியமித்தனர்.

இதனையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போராட்டத்தின் போது மழை பெய்ததால் விவசாயிகள் கொட்டும் மழையில் நனைந்தப்படி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்