இங்கிலீஷ் காய்கறிகள் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

நிலையான கொள்முதல் விலை கிடைப்பதால் இங்கிலீஷ் காய்கறிகள் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2022-06-30 12:45 GMT

கோத்தகிரி

நிலையான கொள்முதல் விலை கிடைப்பதால் இங்கிலீஷ் காய்கறிகள் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இங்கிலீஷ் காய்கறிகள்

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ், பூண்டு, மேரக்காய், காலி பிளவர், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, நூல்கோல் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, மசகல், தீனட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி, லீக்ஸ், பாக்சாய் உள்ளிட்ட ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிட்டு கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.

ஆர்வம்

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார ப் பகுதிகளில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் பருவமழை பெய்து வருகிறது. எனவே காய்கறிகள் விவசாயத்தில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மலைக்காய்கறிகளின் கொள்முதல் விலை நிலையாக இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளுடன் இருப்பதாலும், போதிய விலை கிடைக்காததாலும் கூக்கல்தொரை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் இங்கிலீஷ் காய்கறிகளைப் பயிரிட ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

கொள்முதல் விலை

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

இங்கிலீஷ் காய்கறிகளை விளைவிப்பதற்கு தனியார் நிறுவனங்கள் விதை, நாற்றுக்கள், இடுபொருட்கள் மற்றும் மருந்துகள் அனைத்தையும் கொடுத்து விவசாயம் செய்ய வைக்கின்றனர். மேலும் நிலையான கொள்முதல் விலையை நிர்ணயித்து, அதற்கு ஏற்றார் போல அவர்களே விளைநிலங்களுக்கு நேரில் வந்து அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இங்கிலீஷ் காய்கறிகளுக்கு கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்தாலும், விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தில் மூன்றில் ஒரு பங்கு நஷ்டம் ஏற்பட்ட தொகையை அவர்கள் வழங்கி விடுகின்றனர். மேலும் இவ்வகை காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல கொள்முதல் விலை கிடைப்பதுடன், குறுகிய கால பயிரகாவும் உள்ளது. எனவே ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்