காமயகவுண்டன்பட்டியில் கறிவேப்பிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் கறிவேப்பிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் கறிவேப்பிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கறிவேப்பிலை சாகுபடி
கம்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலங்களில் வாழை, தக்காளி, கத்தரிக்காய், திராட்சை, பீட்ரூட், முள்ளங்கி, நூக்கல், புடலங்காய் உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். காய்கறி உள்ளிட்ட பயிர்களுக்கு உரம் மற்றும் ஆட்கள் கூலி செலவு அதிகம் என்பதால் விவசாயத்தில் வரவும், செலவும் சமமாக உள்ளது.
இதனால் குறைந்த பராமரிப்பில் நிரந்தரமாக வருவாய் ஈட்டக்கூடிய பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பகுதியில் விவசாயிகள் கறிவேப்பிலை சாகுபடியில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அந்த கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தில் கறிவேப்பிலையை பயிரிட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
அதிக லாபம்
கறிவேப்பிலை கன்று தரத்தை பொறுத்து ஒன்று ரூ.5 முதல் ரூ.15 விலையில் நர்சரியில் விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரம் கன்றுகள் நடவு செய்யலாம். வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவதுடன், அவ்வப்போது களை பறிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கு டிராக்டர் உள்ளிட்ட விவசாய கருவிகளின் உதவியும் தேவையில்லை என்பதால் குறைந்த முதலீடே போதுமானது. அத்துடன் செடிகள் அனைத்தும் நன்றாக வளர்ந்த நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்ய முடியும்.
தொடர்ந்து செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்றார்போல் 3 அல்லது 4 மாதங்களில் கறிவேப்பிலை செடிகள் அடுத்த அறுவடைக்கு தயாராகி விடுகின்றன. 30 முதல் 40 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடையை ஈட்டித்தரும் கறிவேப்பிலைக்கு மார்க்கெட்டில் எப்போதும் கிராக்கி இருந்து வருகிறது. குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்டவும் வாய்ப்புள்ளதால் கறிவேப்பிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.