விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Update: 2022-10-27 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தயாளவிநாயகன் அமுல்ராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மொத்தம் 36 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைக்காக துறைவாரியாக பிரித்து கொடுக்கப்பட்டது.

நெல் கொள்முதல் நிலையம்

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:-

மாவை கணேசன்:- விவசாயிகளின் தேவைகள் குறித்து அளிக்கப்படும் மனுக்களுக்கு பதில் வருவதில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

வீரராஜ் (சீர்காழி):- பயிர் பாதிப்பு குறித்து புள்ளியியல் துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் மோசடி நடந்துள்ளது. இதனைத் தடுக்க பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அரசு அதிகாரிகளே நேரடியாக கணக்கிட வேண்டும். உரத்தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.

எங்கள் பகுதியில் அறுவடைப் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால் அறுவடை செய்த நெல்லை வைத்துக்கொண்டு விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கலெக்டர் லலிதா: நெல் அறுவடை நடைபெற்ற இடத்தில் மொபைல் டி.பி.சி. மூலமாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாகவே பயிர் பாதிப்புக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்பது குறித்து துறை செயலாருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

பயிர் காப்பீடு தொகை

முன்னாள் எம்.எல்.ஏ.குத்தாலம் கல்யாணம்:- தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை ரூ.124 கோடி செலவில் புதுப்பித்து மீண்டும் இயக்கப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது. நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நிதி ஒதுக்க உள்ளதாக அறிகிறேன். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் எங்கெல்லாம் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வாய்ப்பு உள்ளதோ, அங்கெல்லாம் கட்டுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

அன்பழகன்:- மாவட்டத்தில் உள்ள 287 வருவாய் கிராமங்களில் 53 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம்

குருகோபிகணேசன்: இந்த ஆண்டு குறுவையின்போது பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பாதிக்கப்பட்டதற்கு இழப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

கூட்டத்தில் விவசாயிகள் 2 பேர் தரையில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்