திசையன்விளையில் விவசாயிகள் உண்ணாவிரதம்

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திசையன்விளையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-09 20:45 GMT

திசையன்விளை:

திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி, சாத்தான்குளம் தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும். வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். நம்பியாற்று கால்வாயில் திருக்குறுங்குடியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திசையன்விளை சுற்றுவட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று திசையன்விளை காமராஜர் சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி, துணைத்தலைவர் ஜெயக்குமார், கடை வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன், காமராஜர் சிவாஜி பொதுநல இயக்க தலைவர் சிவாஜி முத்துகுமார், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, நகர தலைவர் ஜெயசீலன், ஆனைகுடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ரவிந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை பேசுகையில், 'வெள்ளநீர் வடிகால் திட்டம் சாத்தான்குளம் இடைத்தேர்தலின்போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம் ஆகும். அந்த திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். ராதாபுரம், திசையன்விளை தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்' என்றார். போராட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர். போராட்ட பந்தல் முன்பு கருகிய வாழை பயிர்களையும், பனை ஓலைகளையும் தோரணங்களாக கட்டி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்